மலைக்கிராம மக்கள் பீதி உத்தமபாளையம் பகுதியில் தொடர் மழையால் நெல் பயிர்களில் புகையான் நோய் கட்டுப்படுத்த வேளாண்துறை விளக்கம்

உத்தமபாளையம், அக். 17: உத்தமபாளையம் பகுதிகளில் நெல்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது பற்றி வேளாண்மைத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை உதவி இயக்குநர் ராமராஜ் கூறுகையில், உத்தமபாளையம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் முதல்போக நெல் விவசாயம் நடந்து வருகிறது. இதில் நெல்பயிரின் கதிர்நிலை, மணி மற்றும் நிலை பயிராக உள்ளது. தொடர் மழையாலும் பருவநிலையினாலும் நெல்பயிரில் புகையான் தாக்குதல் சில இடங்களில் உள்ளது. இதனை கட்டுப்படுத்துதல் பற்றி உத்தமபாளையம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ள அறிவிப்பில், வளர்ந்த பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். இறக்கைகளில் பழுப்பு நிற அடையாளங்கள்

தென்படும்.

இப்பூச்சிகளில் மூன்று வகைகள் உள்ளன. இறக்கை அற்றவை, அரை இறக்கை, மற்றும் முழு இறக்கை உடையவை. புகையான் பூச்சி பழுப்பு நிறமானது. பெண் பூச்சி முட்டைகளை இலை உறைகளில் வரிசையாய் செருகி வைக்கும். எப்படி தாக்குகிறது: குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும் தூர்களின் அடிப்பகுதிகளில் நீர்பரப்பிற்கு சற்று மேலே அமர்ந்து சாற்றை உறிஞ்சி உண்ணும். தண்டின் உணவுப்பாதையில் (புளோயம்) நேரடியாக தனது உறிஞ்சு சூழலை செலுத்தி சாற்றை உறிஞ்சுவதால் பயிர்கள் துரிதமாக தங்கநிற மற்றும் மஞ்சள் நிறமடையும். புகைந்தது போல் வட்ட வட்டமாக வயலில் ஆங்காங்கே தென்படும். பால்பிடிக்கும் முன்னரே பயிர் காய்ந்து விடும். கதிர் பதராகி விடும்.

வராமல் பாதுகாக்க:வயலில் தண்ணீர் பாய்ச்சுவதை முழுமையாக நிறுத்தி தண்ணீரை வடிகட்ட வேண்டும். எட்டு அடிக்கு ஒரு பட்டம் வீதம் பயிரை ஒதுக்கி வயலில் காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். பூச்சி மருந்து டீனோடின்பூரான் (டேகான் 10 கிராம்/10 லிட்டர்), தண்ணீரில் கலந்து ஏக்கர்க்கு 100 கிராம் மருந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்து டாப்புஸ் 25 கிராம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஏக்கர்க்கு 250 கிராம் மருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் சந்தேகங்கள் இருந்தால் விவசாயிகள் உத்தமபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என

அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: