ஹைவேவிஸ் மலைகிராமங்களில் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்

சின்னமனூர். அக். 17:தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 35வது கி.மீ. தொலைவில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு 7 மலைக்கிராமங்களை கொண்டுள்ளது. மேகமலை, வன உயிரின சரணாலயமாகவும், சுற்றுலா தலமாகவும் உள்ளது.இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக யானைகூட்டத்திலிருந்து தப்பி வந்து ஒற்றையானை ஒன்று நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மணலாறு கிராமத்திற்குள் வந்து நேற்று காலை 6 மணி வரை வீடுகளை உடைத்தும் காய்கறி தோட்டங்களை அழித்தும் அட்டகாசம் செய்தது.

பகல் முழுவதும் பயத்துடன் தேயிலை தோட்ட வேலைக்கு செல்லும் மக்கள் யானை வருவதற்குள் வீடுகளுக்குள் வந்து நுழைந்து கொள்வர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழ் செய்தியாக வெளியிட்டதன் எதிரொலியாக வனத்துறையினர் இரண்டு நாள் முகாமிட்டு, யானையை விரட்டியதாக முகாமை காலி செய்து கீழே இறங்கிவிட்டனர்.

இதையடுத்து ஒற்றை யானை மறுபடியும் மகராஜன் மெட்டிற்கும், வெண்ணியாறு கிராமத்திலும் உள்ள குடியிருப்பு வீடுகளை உடைத்தும் கோயில் பகுதியை உடைத்தும் அட்டகாசம் செய்து வருகிறது. ஒற்றை யானை 3 கிராமங்களையும் சுற்றி கதிகலங்க வைத்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து பீதி அடைந்துள்ளனர்.நிரந்தர தீர்வு ஏற்படுத்தாமல் யானையை அரைகுறையாக விரட்டி விட்டு பாதுகாப்பை உறுதி படுத்தாமல் வனத்துறையினர் இரண்டு நாட்களிலேயே முகாமினை காலி செய்து விட்டு வந்ததால் மலைக்கிராம மக்கள் கோபத்தோடு உள்ளனர்.

Related Stories: