மாநில ஹாக்கி போட்டி: மதுரை அணி வெற்றி

சிவகங்கை, அக்.17 : சிவகங்கையில் தசரா விழாவையொட்டி நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் மதுரை ரிசர்வ் லயன் அணி வெற்றி பெற்றது. சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் சார்பில் தசரா கலை இலக்கிய விழா நடந்து வருகிறது. இதையொட்டி மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் சிவகங்கை, மாவட்ட விளையாட்டரங்கில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் மதுரை, சென்னை, கரூர், கோவில்பட்டி, விருதுநகர், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மதுரை ரிசர்வ் லயன் அணியும், மதுரை திருநகர் அணியும் வெற்றி பெற்றன. இந்த இரண்டு அணிகள் பங்கேற்ற இறுதி போட்டியில் மதுரை ரிசர்வ் லயன் அணி 5-4 என்ற கோல் கணக்கில் திருநகர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணி மூன்றாவது முறையாக தசரா கோப்பையை வென்றுள்ளது. அரண்மனையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ராணி மதுராந்தக நாச்சியார் வெற்றி கோப்பை மற்றும் பரிசை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அலுவலர்கள், விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Related Stories: