அசுர வேக தனியார் பஸ்கள் காரைக்குடி மக்கள் கலக்கம்

காரைக்குடி, அக்.17: காரைக்குடி நகர் பகுதிகளில் அரசு பஸ்களை ஓவர் டேக் செய்து அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு ஆட்டோ, டூவீலர் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை,  புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் செல்கிறது. சுற்றுலா தளமாகவும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளதால் தினமும் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.   அரசு பஸ் புறப்படும் நேரத்துக்கு முன்பு மற்றும் அதற்கு பின்பு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டவுடன் அடுத்த பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றுவதற்காக முன்னே செல்லும் அரசு பஸ்சை பின்னால் புறப்படும் தனியார் பஸ்கள் அசுர வேக்கத்தில் சென்று ஓவர் டேக் செய்கின்றன. இதனால் டூவீலர்கள் வருபவர்கள் தடுமாற வேண்டிய நிலை உள்ளது. தவிர நடந்து செல்பவர்கள் மீது மோதுவது போல செல்கின்றன. அதேபோல் டைமிங்கிற்காக நகர் பகுதிகளிலும் வேகத்தை குறைக்காமலேயே வருகின்றன. இதனை தடுக்க வேண்டிய போலீசாரும் கண்டு கொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தனியார் பஸ்களை பார்த்தால் பயப்பட வேண்டிய நிலை உள்ளது. தனியார் பஸ்கள் அனைத்திலும் காதை செவிடாக்கும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது. டூவீலர்களில் செல்லும் போது பின்னால் வந்து ஹாரனை அடிப்பதால் தடுமாறி கீழே விழவேண்டிய நிலை உள்ளது. தனியார் பஸ்களை கட்டுப்படுத்த வேண்டிய சம்மந்தப்பட்ட துறைகளும் கண்டு கொள்வது இல்லை என்றனர்.

Related Stories: