கடந்தாண்டுக்கான வறட்சி நிவாரண அறிவிப்பு இதுவரை இல்லை விவசாயிகள் ஏமாற்றம்

சிவகங்கை, அக். 17 : மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டில் முழுமையான வறட்சி பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இதுவரை வறட்சி நிவாரண அறிவிப்பில்லாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டிற்கு, கடந்த ஆண்டு இடுபொருள் மானியம் என்ற பெயரில் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 69 ஆயிரத்து 200 எக்டேரில் நெல் பயிர் செய்யப்பட்டது. ஆனால் பம்பு செட் பயன்பாடு மற்றும் சில கண்மாய் ஓரங்களில் இருந்த நீர் மூலம் சில இடங்களில் மொத்தம் 3 ஆயிரம் எக்டேர் மட்டுமே விளைந்தது. மீதம் சுமார் 66 ஆயிரம் எக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் வறட்சியால் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை 309மி.மீ, வடகிழக்கு பருவமழை 413.7மி.மீ பெய்ய வேண்டும். இதில் வடகிழக்கு பருவமழையே மாவட்ட விவசாயத்திற்கு முழுவதும் பயன் கொடுக்கும். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 526மி.மீ, வடகிழக்கு பருவமழை 259.2மி.மீ பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்ததால் விவசாயத்திற்கு எவ்வித பயனும் இல்லாமல் போனது. வடகிழக்கு பருவமழை பெய்ய வேண்டிய அளவைவிட மிகக்குறைவாக பெய்தது. மாவட்ட சராசரி மழையளவான 904.7மி.மீயை விட 72மி.மீ கூடுதலாக மழை பெய்தும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 2017ம் ஆண்டிற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால் இதுவரை வறட்சி நிவாரணம் குறித்த அறிவிப்பில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: ‘‘கடந்த ஆண்டு மாவட்டத்தின் சில பகுதிகள் தவிர மற்ற  பகுதிகளில் கண்மாய், குளங்களில் அதிகளவு நீர் எந்த மாதத்திலும் இருந்ததாக  தெரியவில்லை. இம்மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே  விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மழையை நம்பியே விவசாயம் செய்ய முடியும்.  ஆனால் கடந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை கூடுலாக  பெய்துள்ளது. இதை வைத்து விவசாயத்தை கணக்கிடக்கூடாது. முழுமையாக வறட்சி  பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் அரசிற்கு தெரிவித்து வறட்சி  நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால்  இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

 வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு விரைந்து கிடைக்கவும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: