குடியிருப்புகளின் கழிவுநீர் கலக்கிறது வாசுகி தீர்த்தம்... தாங்கவே முடியலீங்க நாற்றம்... பக்தர்கள் நீராட முடியவில்லை

பரமக்குடி, அக்.17: நயினார்கோவில் வாசுகி தீர்த்தத்தில் கழிவுநீர், குப்பைகள் சேர்ந்து வருவதால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.பரமக்குடி அருகே நயினார்கோவிலில் நாகநாதர் கோவில் உள்ளது. நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதிரில் உள்ள வாசுகி தீர்த்தகுளத்தில் குளித்து பின் நாகதோஷம், மாங்கல்யதோஷம் உட்பட பல்வேறு நேர்த்திக்கடனுக்காக நெய்விளக்கு, மாவிளக்கு ஏற்றி வழிபடுவார்கள். கடந்த பல வருடங்களாக தீர்த்தகுளம் தூர்வாரப்படவில்லை. இதனால் பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராட முடியாமல் சிரமம் அடைந்து வந்தனர். தொடர்ந்து தூர்வாரப்படாததால் கடந்த வருடம் பெய்த மழையிலும் குளம் நிறையவில்லை. தற்போது குளத்தின் கரை பகுதியில் அசுத்தங்கள் நிறைந்துள்ளன. செடிகளும் அதிகம் வளர்ந்துள்ளன. இந்நிலையில் குளத்திற்கு அருகில் உள்ள கடைகள், வீடுகளில் இருந்து கழிவுநீர் நேரிடையாக குளத்தில் சென்றடைகிறது.

இதனால் குளம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தோஷம் கழிக்க வரும் பக்தர்கள் துர்நாற்றம் காரணமாக முகம் சுளித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குளத்தில் சேரும் கழிவுநீரை அகற்றவும், வரும் காலங்களில் மழைநீரை சேகரித்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் திருவிழா காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி நீராட முடியும்.இதுகுறித்து வெளியூர் பக்தர் சௌந்திரம் கூறுகையில், ‘‘பக்தர்கள் வசதிக்காக குளத்திற்கு அருகில் மோட்டார் இணைப்புடன் தண்ணீர் தொட்டி இருந்தாலும் தீர்த்தகுளத்தில் நீராடி நாகநாதருக்கு நேர்த்திக் கடன் செய்யவே பக்தர்கள் விரும்புவார்கள். அதிகாரிகள் பலர் ஏற்கனவே தீர்த்தகுளத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அதிகாரிகள் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து குளத்தின் புனித தன்மையை கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மழைநீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: