பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் மூடி கிடக்கும் புறக்காவல் நிலையம் உடனே திறக்க வலியுறுத்தல்

பரமக்குடி, அக்.17: பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் பயனில்லாத புறக்காவல் நிலையத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பரமக்குடி அருகே அருங்குளம், கொத்தங்குளம், வடக்கூர், குழந்தாபுரி உள்ளிட்ட கிராமங்களுக்கு பார்த்திபனூர் முக்கிய இடமாக உள்ளது. பார்த்திபனூரில் பொதுமக்கள் வசதிக்காக காவல்நிலையம் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ தூரத்தில் காவல் நிலையம் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து செய்திகள் வெளிவந்த நிலையில் பஸ் ஸ்டாண்டு அருகே புறக்காவல்நிலையம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் முறையாக திறக்கப்பட்ட காவல்நிலையில் தற்போது திறக்கப்படுவது கிடையாது. எந்நேரமும் அடைத்தே கிடக்கிறது. இதனால் பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் கூட பெரிய அளவில் அசம்பாவிதமாக மாறி வருகிறது. காவல்நிலையம் அடைத்தே கிடப்பதால் பொதுமக்கள் பலர் அங்கு அமர்ந்து ஓய்வெடுக்கும் அறையாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர். புறக்காவல் நிலையத்தில் முறையாக போலீசாரை நியமித்து பிரச்னைகளை தவிர்க்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் கூறுகையில், ‘‘பொதுமக்கள் வசதிக்காக புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவை அடைத்து கிடப்பதால் யாருக்கும் பயனில்லை. பிரச்னைகள் வராமல் தடுக்க புறக்காவல் நிலையங்களில் முறையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்’’ என்று கூறினார்.

போலீசாரிடம் கேட்டபோது, ‘‘போலீசார் பற்றாக்குறையால் புறக்காவல் நிலையங்களை முறையாக திறக்க முடியவில்லை. வரும் நாட்களில் சம்மந்தப்பட்ட புறக்காவல்நிலையத்திற்கு முறையாக போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.

Related Stories: