நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிச்சு... ஒரு வருடம் ஆச்சு... கடி தாங்க முடியலீங்க... * பொதுமக்கள் கதறல்

ராமநாதபுரம், அக்.17: ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொசு மருந்து அடிக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 1.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நகராட்சியில் மக்கள் சுகாதாரத்துடன் வாழ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், குடியிருப்புகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உருவாகி மக்களை பதம்பார்த்து வருகின்றன. கொசுவை அழிக்க மருந்து அடிக்காததால் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது தினமும் நகராட்சி ஊழியர்கள் கம்பெரசர் ஸ்ப்ரேயர் மூலமாக மருந்தை தண்ணீரில் கலந்து கொசு மருந்து அடிக்கப்பட்டது. தற்போது கொசு மருந்து அடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் மீண்டும் அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தெற்குத்தெரு தனபால் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நகரின் எந்த பகுதிகளிலும் கொசு மருந்து அடித்ததாக தெரியவில்லை. ராமநாதபுரத்தில் சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் நகரின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு, பகல் என கொசுக்கடி தாங்க முடியவில்லை. இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்து கொசுக்களை அடிப்பது தான் வேலையாக உள்ளது. பாதாளச்சாக்கடை உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவு நீர் ஓடும்போது நகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரிசெய்து விடுவார்கள். ஆனால் தேங்கியுள்ள சாக்கடை காய்வதற்கு சில நாட்களாகும். அந்த இடங்களில் நகராட்சியிலிருந்து கொசுமருந்து அடித்தால் கொசுவால் உருவாகும் டெங்கு, மலேரியா போன்றவை தாக்குவதை தடுக்கலாம். அருகில் உள்ள மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பரவி வரும் வேளையில் மக்களை பாதுகாக்க கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: