குற்றவாளியை பிடித்து கொடுத்தும் போலீஸ் வழக்குப்பதிய மறுப்பு தொண்டி காவல்நிலையம் முற்றுகை

தொண்டி, அக்.17: தொண்டியை சேர்ந்தவர் நஸ்ரின் பேகம். இவர் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு இரு தினங்களுக்கு முன் அரசு பேருந்தில் சென்றார்.

 அப்போது கூட்டமாக இருந்ததால் கைப்பையை அமர்ந்திருந்த பெண்ணிடம் கொடுத்தார். கோட்டைப்பட்டினத்தில் இறங்கி பார்த்த போது கைப்பையில் இருந்த 35 பவுன் நகையை காணவில்லை. இருக்கையில் இருந்த பெண் குறித்து விசாரித்ததில் மீண்டும் அவர்கள் தொண்டி நோக்கி செல்வது தெரியவந்தது. உடனடியாக தொண்டியில் இருந்த உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரியப்படுத்தினார். நஸ்ரின் பேகம் உறவினர்கள், அவர்களை கையும் களவுமாக தொண்டி பஸ் ஸ்டாண்டில் வைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் நகையை திருடியது தெரியவந்தது. இதில் ஒரு பெண் தப்பிவிட்டார். சிக்கிய மானாமதுரையை சேர்ந்த பெண்ணை தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சம்பவம் நடந்த இடம் தெரியாததால் தொண்டி மற்றும் கோட்டைப்பட்டினம் காவல் லையத்தில் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். நகையை பறிகொடுத்தவர்கள் இரண்டு நாட்களாக காவல் நிலையம் வந்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நகை உரிமையாளர், உறவினர்கள் மற்றும் தமுமுகவினர் நேற்று முன்தினம் இரவு தொண்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார், சம்பவம் எங்கு நடந்தது என்றே தெரியவில்லை; இங்கு வழக்கு பதிவு செய்ய முடியாது என்றனர்.

ஏதாவது ஒரு ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; இல்லையேல் காவல் நிலையத்தை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று தமுமுகவினர் தெரிவித்தனர்.

Related Stories: