குமரி ஆயுதப்படை மைதானத்தில் ரூ7 லட்சம் செலவில் ஏ.சி. வசதியுடன் உடற்பயிற்சி கூடம்: எஸ்.பி. ஸ்ரீநாத் திறந்து வைத்தார்

நாகர்கோவில், அக்.17 :  நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில்  போலீசாருக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை எஸ்.பி. நாத் திறந்து வைத்தார். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களும் அமைந்துள்ளன. ஆயுதப்படை வளாகத்தில் விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு ரூ7 லட்சம் செலவில் போலீசாருக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணியும் நடந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து புதிய உடற்பயிற்சி கூட திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.  இந்த பயிற்சி கூடத்தை எஸ்.பி. நாத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், போலீசார் பணிச்சுமை காரணமாக தங்களது உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

மன அழுத்தம் உள்ளிட்டவையும் உடல் நலம் பாதிக்கப்பட காரணமாக அமைகிறது. நம்மை பொறுத்தவரை 24 மணி நேர பணி ஆகும். இந்த சூழ்நிலையில் நமக்கு கிடைக்கும் நேரத்தை உடல் நலம் பேணவும் பயன்படுத்த வேண்டும். எனவே போலீசார் அனைவரும் தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் அவசியமாகும். எனவே உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயப்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். ஏ.டி.எஸ்.பி. ஸ்டேன்லி ஜோன்ஸ், டி.எஸ்.பி. இளங்கோ மற்றும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர், எஸ்.ஐ. அருண் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: