மற்ற கட்சிகள் எல்லாம் காணாமல்போய் விடும் திமுகவும், அதிமுகவும் மட்டுமே தமிழகத்தில் பெரிய கட்சிகள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

``தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.வும், அதிமுகவும் மட்டுமே மிகப் பெரிய கட்சிகள். மற்ற கட்சிகள் எல்லாம் காணாமல்போய் விடும்’’ என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை அது இயற்கையாகவே அதிமுகவின் கோட்டை. கருத்துக்கணிப்புகளும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என கூறுகின்றன. எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டை கூறினால் அதிமுகவை அழித்து விடலாம் என நினைக்கின்றனர். அது ஒரு போதும் நடக்காது. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. எனவே எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவர் காலையில் 3 இட்லியும், இரவில் கஞ்சியும் தான் குடிக்கிறார். எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் குற்றமற்றவர்கள்  என்பதை நிரூபிப்போம்.

கமல் தொடங்கி உள்ள கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் நாட்டுக்கு ஆபத்து. கமலுக்கு வெளிநாட்டு தீயசக்திகளுடன் தொடர்பு உள்ளதோ? என சந்தேகம் உள்ளது. ஒரு சிறு பிரச்னைக்காக நாட்டை விட்டே வெளியேற துடித்தவர். தற்போது தமிழகத்தின் ரட்சகர் போல பேசி வருகிறார். அவரது பேச்சுக்கள் தேர்தலுக்கு ஒத்து வராது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் மட்டுமே மிகப் பெரிய கட்சிகள். மற்ற கட்சிகள் எல்லாம் காணாமல் போய் விடும். எம்.ஜி.ஆர். மக்களோடு மக்களாக இருந்து மாளிகையை கண்டவர். கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை சந்திக்கிறார். ரஜினி ஒரு ஆன்மிக வாதி. பிறரை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கள் கூற மாட்டார்.  கமலால் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வளர்ந்து வருகிறது. பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. கொள்முதல், விற்பனை இரண்டிலும் சாதனை படைத்து வருகிறது. சபரிமலை பிரச்னையை பொறுத்தவரை மக்களின்  நம்பிக்கை மற்றும் வழிபாட்டில் யாரும் தலையிட முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: