கருங்கல் அருகே தரமற்ற பாலப்பணி தடுத்து நிறுத்தம்

கருங்கல், அக்.17 : கருங்கல் - மார்த்தாண்டம் சாலையில் கிள்ளியூர் எம்எல்ஏ அலுவலகம் எதிரே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது. அதில் கழிவு நீரும் கலந்து செல்கிறது. இதனால் மழை காலத்தில் கழிவுகள் அதிகளவில் வந்து அடைப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அடைப்பை சரி செய்வதற்காக தற்போது இருக்கும் பாலத்தை துண்டித்து புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி அந்த ரோட்டை துண்டித்து பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த ஓடையில் மழை நீருடன், கழிவு நீரும் அதிகளவில் கலந்து பாலம் கட்டுவதற்காக ேதாண்டப்பட்ட பள்ளத்தில் சேர்ந்தது. சகதியும், கழிவு நீரும் நிரம்பி இருந்ததால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள் வந்து சேறு சகதியுடன் இருந்த இடத்தில் காங்கிரீட் கலவையை கொட்டி பாலம் கட்டும் பணியை தொடங்கினர். இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனித்து தட்டி கேட்டனர். காங்கிரீட் போட வேண்டிய இடத்தில் தேங்கி கிடக்கும் சேறு, சகதியை அகற்றி சுத்தம் செய்தபின் அங்கு காங்கிரீட் கலவை கொட்டி பாலம் கட்ட வேண்டும் என அவர்கள் கூறினர். இதனால் ஊழியர்கள் வேலையை பாதியில் நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: