குறைதீர் கூட்டத்தில் 2,225 மனுக்கள் குவிந்தன

நாமக்கல், அக்.16: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 2,225 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர். இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு உள்ளிட்ட கோரிக்கை என 2,225 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மனுகொடுக்க வரும் பொதுமக்களை போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

அதே போல், வடுகப்பட்டி பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வடுகப்பட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வடுகப்பட்டிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதமாக, எங்கள் ஊருக்கு வரவேண்டிய குடிநீர் அருகில் உள்ள கொண்டநாய்க்கன்பட்டிக்கு செல்கிறது. இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் காவிரி குடிநீர் வருகிறது. அது அனைத்து மக்களுக்கும் போதுமானதாக இல்லை. எனவே வடுகப்பட்டிக்கு  சீராக குடிநீர் விநியோகம் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: