அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை வியர்வையாக ரத்தம் வெளியேறிய சிறுமி பூரணமாக குணமடைந்தார்

கிருஷ்ணகிரி, அக்.16: வேப்பனஹள்ளி அருகே வியர்வை போல் ரத்தம் வெளியேறிய சிறுமி முழுமையாக குணமடைந்ததையடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் நிபுணரை கலெக்டர் பாராட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கங்கோஜிகொத்தூர் ஊராட்சி ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி லட்சுமிதேவி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 10 வயது ஆகிறது. அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமிக்கு கடந்த 3 மாதங்களாக உடம்பில் வியர்வை போல் ரத்தம் தானாக வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை. கூலி வேலை செய்யும் தன்னால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியவில்லை என கிருஷ்ணகிரி கலெக்டர் டாக்டர் பிரபாகரிடம், சிறுமியுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கும் சிறுமியை அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் சிகிச்சை அளித்தும் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை. இதனால் மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர். இது குறித்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. இச்செய்தியை பார்த்த ஓசூரை சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன், நாகராஜை தொடர்பு கொண்டு, சிறுமிக்கு தான் சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தார். சிறுமியை அவரது பெற்றோர்கள் கடந்த 6ம் தேதி ஓசூருக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த கங்காதரன், அதிகப்படியான உடல் சூட்டால் ரத்தம் வெளியேறுவதாக கூறி, அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளித்தார். அத்துடன் சிறுமியின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உணவு பழக்க வழக்கத்தை மாற்றினார். இதையடுத்து சிறுமியின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவது முற்றிலும் நின்றுவிட்டது. சிறுமியின் தந்தை நாகராஜ், தனது மகள் அர்ச்சனா மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் நிபுணர் காங்காதரன் ஆகியோர், நேற்று கலெக்டர் பிரபாகரை சந்தித்தனர். அப்போது சிறுமியிடம் நலம் விசாரித்த கலெக்டர், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் முழு விவரத்தை கேட்டறிந்தார். பின்னர், சிறுமிக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த கங்காதரனை பாராட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Related Stories: