30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.16: கிருஷ்ணகிரியில், கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம்  முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 1,050 ரேஷன் கடைகளில் 850 கடைகள் மூடப்பட்டது. இதனால் பொருட்கள் வாங்க சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய  பஸ் நிலையம் அருகில் ரேஷன் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடந்தது. இதற்கு மாவட்ட தலைவரும், மாநில  துணைத்தலைவருமான சோமேஸ்வரன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் சங்கர்  முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர்  கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் நிர்வாகிகள் முகமத்கான், வேலு,  பழனிசாமி, நாகேஷ், பிரபாகரரெட்டி, செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.அரசு நுகர்பொருள் வாணிப கழக  பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ₹22 ஆயிரம் வழங்கப்படும் நிலையில்,  கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு ₹5  ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆகையால் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.  கூட்டுறவு ரேஷன் கடைகள் அனைத்தையும், பொது விநியோகத் திட்ட  அடிப்படையில் இணைக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories: