தாசம்பட்டியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்ஒயரால் அபாயம்

தர்மபுரி, அக்.16: தர்மபுரி அருகே தாசம்பட்டியில் விவசாய நிலத்தின் வழியாக தாழ்வாக உயர்அழுத்த மின்ஒயர் செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இண்டூர் அருகே தாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி அக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் உயர்அழுத்த மின்பாதை அமைக்கப்பட்டது. அப்போது, கைக்கு எட்டும் உயரத்தில், மின் ஒயர்கள் தாழ்வாக அமைக்கப்பட்டது. இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் அக்கண்ணன் சிரமப்பட்டு வருகிறார். மேலும், மழை காலங்களில், ஈரப்பதத்தால் மின்கசிவும் ஏற்பட்டு வருகிறது. இந்த வழியாக 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த மின்பாதையை வேறு பகுதிக்கு மாற்றும்படி, மின்வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அக்கண்ணன் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் உரிய விசாரணை நடத்தி, மின்பாதையை வேறு பகுதி வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: