அரசு பள்ளிகளில் கை கழுவும் தினம் கடைபிடிப்பு

தர்மபுரி, அக்.16: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், சுத்தமாகவும், முறையாகவும் கை கழுவுவது குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு கைகழுவுதல் பற்றி மாணவிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் தெரசாள், உதவி தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். இதே போல், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று கை கழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் அக்டோபர் 15ம் தேதி உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கை கழுவுவது ஒரு சிறிய செயல்தான். ஆனால், அதை முறையாக செய்யாததால் பல தொற்றுநோய்கள் ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், விளையாடிய பிறகு மற்றும் கழிப்பறை சென்று வந்த பிறகு என எந்த செயலை செய்த பின்னும், கைகளை முறையாகக் கழுவ வேண்டும். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு, கைகழுவாமல் சாப்பிடக்கூடாது. சோப்பு போட்டு கைகழுவுவதன் மூலம், 80 சதவீத நோய்கள் வராமல் தடுக்க முடியும். கைகளை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்,’ என்றனர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சுத்தமாகவும், முறையாகவும் கை கழுவுவது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Related Stories: