ஏல அங்காடியில் பட்டுக்கூடு வரத்து சீரானது

தர்மபுரி, அக்.16: தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், நேற்று விவசாயிகள் 5 டன் வெண்பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டங்களில் 1,700 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மல்பெரி சாகுபடியில் 1,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சிறந்த தரத்துடன் இருப்பதால், தர்மபுரி பட்டுக்கூடுகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. தர்மபுரி 4 ரோடு சந்திப்பில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி, பட்டுக்கூடுகள் விற்பனையில், மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. இதனால், இங்கு பட்டுக்கூடுகளை விற்க, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தாராபுரம், ஈரோடு, கோபி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும், ஆந்திர மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களிலிருந்தும் பட்டுக்கூடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

தினசரி 25 முதல் 150 விவசாயிகள், சராசரியாக 2 முதல் 4 டன் வரை பட்டுக்கூடுகளை இங்கு விற்பனை செய்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை, வெண் பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. இதில், திடீரென கடந்த வாரம் விலை சரிந்தது. பட்டுக்கூடு வரத்தும் தொடர்ந்து சரிந்திருந்தது. இந்நிலையில் பட்டுக்கூடு வரத்தும், சரிவும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வெண்பட்டுக் கூடு, அதிகபட்ச விலை ₹280க்கு விற்பனையானது. அதேபோல, குறைந்தபட்ச விலை கிலோ ₹200க்கும், சராசரி விலை கிலோ ₹210க்கும் விற்பனையானது. நேற்று 83 விவசாயிகள் 5 டன் வெண்பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு எடுத்து வந்தனர். இதில், ₹16 லட்சத்திற்கு ஏலம் பட்டுக்கூடு ஏலம் போனது. விவசாயிகள் உடுமலைப்பேட்டை, கோபி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டுவந்திருந்தனர்.

இது குறித்து பட்டுக்கூடு விற்பனை அங்காடி அதிகாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ஈரப்பதம் காரணமாக பட்டுக்கூடுகளின் தரம் சற்று குறைவாக இருக்கும். கடந்த சில நாட்களாக பட்டுக்கூடுகளில் ஈரப்பதம் உள்ளதால், அதிலிருந்து நூல் பிரித்தெடுக்க சிரமம் ஏற்பட்டது. அதனால் விலை சரிந்தும், வரத்து சரிந்தும் காணப்பட்டது. நேற்று வழக்கமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. பட்டுக்கூடு வரத்தும் சீராக இருந்தது என்றார்.

Related Stories: