கொண்டகரஅள்ளியில் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு

தர்மபுரி, அக்.16:  கொண்டகரஅள்ளி ஊராட்சியில், இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வத்தல்மலை சின்னாங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், டிஆர்ஓ ரகமத்துல்லாகானிடம் கொடுத்த மனு: கொண்டகரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வத்தல்மலையில், பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். 2018-19ம் நிதியாண்டிற்கான இலவச ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ், விதிகளின்படி பயனாளிகள் தேர்வு செய்ய 2 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. விதவைகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படவில்லை. விண்ணப்பித்தவர்கள் பட்டியல், தகுதியானவர்கள் பட்டியல், பயனாளிகள் பட்டியல் என எந்த பட்டியலும், முறையாக தகவல் பலகையில் ஒட்டப்படவில்லை. எனவே, இந்த முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பயனாளிகள் பட்டியலை ரத்து செய்துவிட்டு, விதிகளின்படி பயனாளிகளை தேர்வு செய்ய, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், வெள்ளாளப்பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘வெள்ளாளப்பட்டியில், தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிவறைகள் தரமின்றி கட்டப்படுகிறது. இந்த கழிவறை விரைவில் இடிந்துவிடும் என்பதால், மாவட்ட நிர்வாகம் வெள்ளாளபட்டியில் நடந்து வரும் தனிநபர் கழிவறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்யவேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் என்பவர் கொடுத்த மனுவில், ‘கடந்த 27.11.90ம் ஆண்டில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றினேன். கடந்த 31.7.2008ல் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு தர வேண்டிய பென்ஷன் தொகையை கடந்த 10 ஆண்டுகளாக தராமல் அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். எனவே, பென்ஷன் தொகையை உடனே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியிருந்தார்.

Related Stories: