30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.16: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், தர்மபுரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. மாலை 4 மணியளவில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மனோகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கூட்டுறவு துறை, வருவாய்த்துறை, டிஎன்சிஎஸ்சி என 3 துறைகள் உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு என தனியாக துறை நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கி, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்க வேண்டும்.

ரேஷன் கடைகளை 100 சதம் கணினி மயம் ஆக்க வேண்டும். ரேஷன் பொருட்களை சரியான எடையில் வழங்க, பொட்டலம் முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படியை ₹300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 4 ஆயிரம் பேரின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், குமார், ஜம்புலலிதா, அண்ணாமலை, சீனிவாசன், ரவி, கிருஷ்ணமூர்த்தி, பார்த்தசாரதி, பொருளாளர் ஜான்ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அவதி தர்மபுரி மாவட்டத்தில், விற்பனையாளர்கள், எடையாளர்கள் என 500 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 1052 ரேஷன் கடைகளில், 800க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று மூடப்பட்டதால், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: