கருங்கல் அருகே தொழிலாளி கொலை கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம்

கருங்கல், அக். 16:  கருங்கல் அருகே தொழிலாளி கொலையில் கைதான உறவினர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கருங்கல் அருகே பாலூர் சேறுகரை பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லெட். இவருக்கு சசிகுமார் (46), ராஜகுமார் (44) என்ற இரு மகன்கள் உண்டு. இருவருக்கும் திருமணமாகி விட்டது. தொழிலாளியான சசிகுமார் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர்களது வீட்டு அருகில் குடும்ப கோயில் உள்ளது. இவர்களின் உறவினர் நேசையன். பாலூர் அணைக்கரை பகுதியில் வசிக்கிறார். இவருக்கு ெஜகதீஷ் (35), மகேஷ் (33) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி ஜெகதீஷ் குடும்ப கோயிலில் வழிபாடு நடத்த வந்தார். அப்போது சசிகுமாரின் குடும்பத்தினருக்கும் ,ெஜகதீசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ஜெகதீஷ் தனது சகோதரர் மகேசிடம் கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த மகேஷ் பாலூர் சேறுகரை பகுதிக்கு வந்து, சசிகுமார் மற்றும் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதில் மகேசுக்கும், சசிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது  ஆத்திரமடைந்த மகேஷ், சசிகுமாரை அங்கிருந்த உடைந்த சிரட்டையால் குத்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சசிகுமார் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல் போலீசார் மகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மகேஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் குடும்ப கோயிலில் எனது அண்ணன் ஜெகதீஷ் தினமும் விளக்கேற்றுவது வழக்கம். சம்பவத்தன்று விளக்கேற்ற சென்றபோது சசிகுமார் அவரை விளக்கேற்ற விடாமல் தடுத்ததோடு தகாத வார்த்தை பேசியுள்ளார். குடும்ப கோயிலில் விளக்கேற்றுவதை எப்படி தடுக்கலாம்? என கேட்க சென்றேன். அப்போது எங்களுக்குள் கைகலப்பானது. ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த சிரட்டையை எடுத்து அவரை தாக்கினேன். இதில் அவர் அங்கேயே இறந்துவிட்டார். இவ்வாறு மகேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மகேஷ் மீது ஏற்கனவே கடந்த 2008ல் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த கோபு என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.

Related Stories: