கிரைம் நியூஸ்: டிராக்டர் மோதி வாலிபர் பலி

திருச்சுழி: ராமநாதபுரம் மாவட்டம், நெடுங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திக் (30). சிலுப்பி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (50). இருவரும் திருச்சுழி அருகே உள்ள வீரசோழனில் கடை மற்றும் டிராவல்ஸில் வேன் டிரைவர்களாக உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்து டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, எதிரே வந்த வீரசோழனைச் சேர்ந்த செந்தில்முருகன் (21) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த விநாயகம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

முதியவர் கொலை

திருச்சுழி அருகே, இலுப்பையூரிலிருந்து சீலம்பட்டி வழியாக ரெட்டியபட்டி செல்லும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 60 வயது முதியவர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். நேற்று காலை அப்பகுதி வழியாக விவசாயப் பணிக்கு சென்ற பொதுமக்கள் ம.ரெட்டியபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆடுகள் திருட்டு

ராஜபாளையம் அருகே, கோவிலூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், அப்பகுதியில் ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் இருந்த ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகள் திருடு போயின. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வமணி, பரமசிவம், உலகபாண்டியன், வனராஜ் ஆகியோர் மீது சேத்தூர் போலீசில் சுப்பிரமணியன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருதரப்பு மோதல்: 6 பேர் கைது

விருதுநகர் அருகே கோட்டநத்தத்தை சேர்ந்தவர் ஆனந்த கண்ணன் (18). விருதுநகரில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் தடங்கம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் பஸ்சில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், சைக்கிளில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 1 மாணவரை வழிமறித்து ஆனந்தகண்ணன் தாக்கினார். இது குறித்து மாணவர் தனது சகோதரர்கள் சந்திரபோஸ் (24), வேல்முருகன் (22) மற்றும் உறவினர்கள் பாண்டி (18), பார்த்திபன் (30) ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஆனந்தகண்ணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து, அவரது சகோதரர் வேல்ராஜை (24) தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். வேல்ராஜ் புகாரின்பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் சந்திரபோஸ், வேல்முருகன், பாண்டி, பார்த்திபன் மற்றும் பிளஸ் 1 மாணவரை கைது செய்தனர். பிளஸ் 1 மாணவன் புகாரின் பேரில் ஆனந்தகண்ணனையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: