மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செய்யாத பணிகளுக்கு அரசு நிதி என புகார்

விருதுநகர், அக். 16: விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், செய்யாத பணிகளை கூறி, அரசு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சக்திவேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செய்யாத பணிகளை செய்ததாக கூறி, வாங்கிய பொருட்களில் அரசு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதில், 450 ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்களை கொடுக்காமல், அரசு அனுமதியில்லாத கடையில் பில் பெற்று மோசடி நடந்துள்ளது.

மைதானத்தில் செம்மண் அடிப்பதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை மண் அடிக்காமல் வீணடித்துள்ளனர். அரசு அனுமதியின்றி ஒரு தனியார் கடையில் பில் தயார் செய்துள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகுமார் கூறுகையில், ‘கிராம விளையாட்டு போட்டிகள் நடத்த 450 ஊராட்சிகளுக்கும் மதுரை, ராமநாதபுரம் கூட்டுறவு சங்கம் மூலம் புட்பால், வாலிபால், நெட் உட்பட 12 பொருட்கள் ரூ.27 லட்சத்திற்கு வாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறையாக வழங்கப்பட்டுள்ளது. மைதானத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: