ஐஜி தலைமையில் 1700 போலீசார்

உளுந்தூர்பேட்டையில் தீவிர பாதுகாப்பு

உளுந்தூர்பேட்டை, அக். 16:  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை (17ம் தேதி) அதிமுக 47ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இதில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானவர்கள் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாகனங்கள் நிறுத்துவது,

போக்குவரத்துக்கு  இடையூறு இன்றி வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நேற்று மாலை வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் வரும் வழி, தங்கும் இடம் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

முதல்வர் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் உள்ளிட்ட 3 டிஐஜிக்கள், 6 எஸ்பிக்கள், 10 ஏடிஎஸ்பி, 28 டிஎஸ்பி, 100 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் வெளிமாவட்டத்தை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக வர உள்ளனர்.ஆய்வின்போது டிஐஜி சந்தோஷ்குமார், எஸ்பிக்கள் விழுப்புரம் ஜெயக்குமார், கடலூர் சரவணக்குமார், குமரகுரு எம்எல்ஏ, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Related Stories: