கைத்தறி தொழிலை பாதுகாக்க தனித்துறை

புதுச்சேரி, அக். 16: ஏஐடியூசி மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் தினேஷ்பொன்னையா தலைமை தாங்கினார்.

பொது செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். மாநில செயல் தலைவர் அபிஷேகம், துணை தலைவர்கள் கலியபெருமாள், சந்திரசேகரன், ரவி, முருகன், கண்ணன், மாநில செயலாளர்கள் தயாளன், செந்தில்முருகன், முத்துராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், கட்டிட தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் தீபாவளிக்கு வழங்கப்படும் இலவச உதவி தொகையை உயர்த்தி ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி கட்டிட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் அறிவித்ததுபோல் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கொண்டு வரும் மணலை பாசிக் மூலம் நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 10 நாள் முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டும். பஞ்சாலை மற்றும் கைத்தறி தொழில்களை பாதுகாக்க அரசு தனித்துறை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: