மாதந்தோறும் இலவச அரிசி வழங்க அரசு தீவிரம்

புதுச்சேரி, அக். 16: புதுவையில் மாதந்தோறும் இலவச அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக டெண்டர் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

 புதுவையில் அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. சிவப்பு நிற ரேசன் அட்டைகளுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைகளுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்படுகின்றன.

 முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு இலவச அரிசி வழங்குவது தொடர்பான கோப்பினை கவர்னரின் ஒப்புதலுக்கு கடந்தாண்டு அனுப்பியது. அப்போது அனைவருக்கும் இலவச அரிசி வழங்குவதா? என கவர்னர் கிரண்பேடி அரசிடம் விளக்கங்களை கேட்டார். இதனால் மாதந்தோறும் தவறாமல் விநியோகிக்கப்பட்ட இலவச அரிசி விநியோகம் தடைபட்டது.

 பின்னர் அமைச்சரவை கூடி ஆலோசித்து கவர்னருக்கு இதுதொடர்பான ஒப்புதல் கோப்பினை அனுப்பியது. அப்போது ஏற்கனவே கடந்த கால அரசுகள் பின்பற்ற நடைமுறைகளின்படியே இத்திட்டம் காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், இதற்கான டெண்டரில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

 அதன்பிறகு டெண்டர் தொடர்பான விளக்கங்களை கேட்டு அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனை கூட்டத்தின்பின் கிரண்பேடி இலவச அரிசி விநியோகிக்கும் கோப்புக்கு அனுமதி அளித்தார். அதன்பிறகு அவ்வப்போது தடைபட்டு இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த செப்டம்பர் 10ம்தேதி இதற்கான கோப்புக்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்கினார்.

 இதையடுத்து அரிசியை கொள்முதல் செய்வதற்கான பணிகளில் குடிமை பொருள் வழங்கல் துறை தீவிரமாக இறங்கியது. அமைச்சர் கந்தசாமி, துறை இயக்குனர் வல்லவன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையிலான 6 மாத காலத்திற்கு தேவையான அரிசியை கொள்முதல் செய்ய முடிவெடுத்து இப்பணிகளை முடுக்கி விட்டனர். மாதம் 4,800 டன் அரிசி தேவைப்படும் நிலையில் கோதுமையும் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்கான விபரங்கள் இறுதி செய்யப்பட்டு இ-டெண்டர் கோரப்பட்டது.

 புதுவை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவச அரிசியின் தேவை, டெண்டர் மதிப்பு, கட்டண விபரங்கள், விண்ணப்பிக்கும் தேதி, டெண்டர் இறுதி செய்யப்பட உள்ள நாள் உள்ளிட்ட விபரங்கள் அப்லோடு செய்யப்பட்டது. அக்டோபர் 2வது வாரத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டன.

 தற்போது டெண்டர் விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரம் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் இலவச அரிசி விநியோகிப்பது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் உடனடியாக அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து டெண்டரை இறுதிசெய்யும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 இன்னும் ஓரிரு நாளில் இப்பணிகள் முடிவடையும் நிலையில் அடுத்த வாரம் முதல் இலவச அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கையில் குடிமை பொருள் வழங்கல் துறை முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மாதம் இனிமேல் தடையின்றி ரேசன் அரிசி விநியோகிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுபற்றி குடிமை பொருள் வழங்கல்துறை இயக்குனர் வல்லவனிடம் கேட்டபோது, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் மாதாந்திர இலவச அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் ரேசன் அரிசி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார்.

Related Stories: