மழையால் நாற்று நடும் வயலாக மாறிய தார்ச்சாலை

காளையார்கோவில், அக். 16: காளையார்கோவிலில் இருந்து காட்டாத்தி வழியாக பள்ளித்தம்மம் செல்லும் தார்ச்சாலை மழையால் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. காளையார்கோவில் அருகே காட்டாத்தி வழியாகப் பள்ளித்தம்மம் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை சமீபத்தில் பெய்த மழைக்கு நாற்று நடும் வயல் போல் மாறியுள்ளது. இந்த சாலை வழியாக வேம்பனி, அம்மாபட்டினம், உருவாட்டி என பல கிராமத்திற்கான பிராதானச் சாலையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கிராமங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், அதற்கு தேவையான இடுபொருட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு அதிகளவில் இச்சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள  உருவாட்டி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார்ச்சாலையை இதுவரை  மராமத்துப்பணி செய்யாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே நடப்பவர்களின் பாதங்களை பதம்பார்க்கும் அளவிற்கு ஜல்லிகற்கள் பெயர்ந்து  குண்டும். குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம், அமைச்சரிடம் மனு கொடுத்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே, இப்பகுதியில் தரமான  தார்ச்சாலையை உடனடியாக அமைத்துத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: