பெட்ரோல் திருடும் சிறுவர்கள்

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு, வழிப்பறி, மோட்டர் சைக்கிள் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடப்பது வாடிக்கை. ஆனால் தற்போது பெட்ரோல் விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளதால், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது.

 குறிப்பாக, லாஸ்பேட்டை காவல்நிலைய சரகத்துக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகர், எழில் நகர், தேவகி நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் பெட்ரோல் திருடி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்துள்ளார்.

அதில், இரவு நேரத்தில் 3 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியூபை நீக்கிவிட்டு பாட்டிலில் பெட்ரோல் பிடிப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளிலும் அந்த சிறுவர்கள் டியூவை நீக்கிவிட்டு பெட்ரோல் பிடித்துள்ளனர். அதை பொதுமக்கள் பார்த்து சத்தமிட்டுள்னர். உடனே அந்த சிறுவர்கள் பெட்ரோல் பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இருப்பினும், பொதுமக்கள் சிலர் அவர்களை விரட்டி பிடித்து லாஸ்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

 போலீசார் விசாரித்ததில், அவர்கள் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. பெட்ரோல் விலை அதிகரித்திருப்பதால் கை செலவுக்காக மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடி வருவதை ஒப்பு கொண்டனர். குறிப்பாக, ஆட்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களை தேர்வு செய்து பெட்ரோல் திருடியதாகவும் கூறியுள்ளனர். அந்த சிறுவர்கள் மைனர் என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 இதேபோல் பல பகுதிகளில் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் தங்களது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் டேங்க் கீழே லாக் போட்டுள்ளனர். அதையும் மர்ம நபர்கள் உடைத்துவிட்டு பெட்ரோல் திருடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே புதுச்சேரியில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதராப்பட்டில் மாணவரை தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரி,  அக். 16:  புதுவை,  காட்டேரிக்குப்பம் அடுத்த கரசூரில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவரது மகன் ராகுல் (17). பிளஸ்2 மாணவரான இவர் சம்பவத்தன்று சேதராப்பட்டு நாகமுத்து  மாரியம்மன் கோயில் அருகிலுள்ள சிற்றுண்டி கடையில் நின்று கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு வந்த சேதராப்பட்டு பெருமாள் மற்றும் சிலர், கரசூரில் குமரன்  என்பவரிடம் ராகுல் வைத்திருந்த முன்பகை தொடர்பாக அவரிடம் கேட்டு அசிங்கமாக  திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.  இதுகுறித்து  ராகுல் அளித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் பெருமாள் உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதிந்து தலைமறைவான  அனைவரையும் தேடி வருகின்றனர். பெருமாள் லோடு கேரியர் டிரைவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: