நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும்

புதுச்சேரி, அக். 16:  கவர்னர் மாளிகை சிஎஸ்ஆர் நிதி ஊழல் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அவர் கூறியதாவது:   புதுச்சேரி  கவர்னர் கிரண்பேடி சமூக பொறுப்புணர்வு நிதியை, தான் வசூல் செய்யவில்லை, யாரையும் சந்தித்து பேசவில்லை. தனிப்பட்ட  முறையில் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

நிதி  வழங்குபவர்கள் தானாக முன்வந்து கொடுத்ததாகவும், வாய்க்கால்களை தூர்வாரும்  வேலையை, அவர்களே செய்ததாகவும் தெரிவித்தார். கவர்னராக இருப்பவர்கள் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். சிஎஸ்ஆர் நிதியை பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இதற்கான  கமிட்டியானது முதல்வரை தலைவராக கொண்டு தொழில்துறை அமைச்சர், தலைமை செயலர்,  4 செயலர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு செயல்படுகிறது.

இந்த குழு தான்  நிதியை பெறுவது மற்றும் என்னென்ன திட்டங்களை  மேற்ெகாள்ள வேண்டும், என்பதையும் முடிவு செய்யும்.

ஆனால் கவர்னர் அலுவலகத்தில் இருந்து  கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், பாசன கால்வாய்களை  தூர்வார ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 1 லட்சம் செலவாகும்.

இதற்காக கவர்னர்  மாளிகையில் நிதி வழங்கலாம். இதற்கான கவர்னர் மாளிகை கட்டுப்பாட்டு அதிகாரி  ஆஷாகுப்தா மற்றும் குறைதீர்வு அதிகாரி பாஸ்கர் ஆகியோரை  அணுகவும்.  நிதி கொடுப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். மேலும்  கவர்னர் மாளிகை கான்ட்ராக்டர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு நிதி வசூல் செய்யவில்லை என உண்மைக்கு புறம்பான செய்திகளை கவர்னர் கூறிவருகிறார். கவர்னர் மாளிகை தான் வசூலித்தது என்பதற்கு நிறைய  ஆதாரங்கள் இருக்கிறது. குறிப்பாக நியமன எம்எல்ஏ செல்வகணபதி தன்னுடைய சம்பள  தொகையை சிஎஸ்ஆர் நிதிக்கு வழங்கியது தொடர்பான புகைப்படம் ஆதரமாக இருக்கிறது.

கவர்னர் மாளிகை வசூலித்த நிதி எவ்வளவு என்பதற்கு முறையான கணக்கு வழக்கு இல்லை. யார் கொடுத்தார்கள்?  எவ்வளவு கொடுத்தார்கள்? காசோலையாக கொடுத்தார்களா?  என்பது தெரியவில்லை. பணம் கொடுத்ததற்கான ரசீதும்  கொடுக்கப்படவில்லை.

இதுதொடர்பான கணக்குகளை கவர்னர்  மாளிகை பகிரங்கமாக  தெரியப்படுத்த வேண்டும்.

சிஎஸ்ஆர் நிதியில் கவர்னர் மாளிகைக்கு, எந்த பங்களிப்பும் இல்லை என கூறிவிட்டு அதிகாரிகளை நியமித்து பணம் வசூலித்தது ஏன்? பங்காரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்  போது ரூ. 1 கோடி வசூலிக்க திட்டமிட்டிருந்ததாகவும், ரூ.80 லட்சம் தான்  கிடைத்துள்ளதாகவும் கவர்னரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆனால் தற்போது பணம் வசூலிக்கவில்லை என  முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார்.  நிதியை வசூலிக்கும்  அதிகாரம் கவர்னருக்கு உண்டா? மற்றவர்கள் அதிகாரத்தில் கவர்னர் தலையிடக்கூடாது.

நிதி  வழங்கியவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களா? முறையாக வருமான வரி  கட்டுபவர்களா? அரசிடம் இருந்து ஏதேனும் சலுகை எதிர்பார்த்து  கொடுக்கிறார்களா? என ஆராய்ந்து தான் பெற வேண்டும்.  

கவர்னர்  தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிஎஸ்ஆர் நிதி என்ற போர்வையில் கட்டாய வசூல் செய்திருக்கிறார்.

வார ஆய்வு பணி என்ற பெயரில் பள்ளி மாணவர்களை அழைத்து  செல்லும் போது புதுச்சேரியில் இருந்து 3 ஓட்டல்களில் 100 பேருக்கு காலை  சிற்றுண்டி தர வேண்டும் என ராஜ்நிவாசில் இருந்து தொலைபேசியில் உத்தரவு  போடுகிறார்கள். அதில் ஒரு ஓட்டலில் இருந்து மட்டும் வாங்கிவிட்டு மீதம்  உள்ள பணத்தை அலுவலக ஊழியர்கள் எடுத்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

டிஎன் பாளையத்தில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாங்கிய ரூ. 7 லட்சம்  என்ன ஆனது. அவர்கள் 12ம் வகுப்புக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள்.  அவர்கள் எதையோ? எதிர்பார்த்து கொடுத்திருக்கலாம் அல்லவா?

தற்போது தீபாவளி  நெருங்கிவிட்டது. இனிப்பு கடைகளை கவர்னர் அலுவலகம் தொடர்பு கொண்டுள்ளது.  மேலும் 600 சேலை, 600 வேட்டி கேட்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வசூலித்த ரூ.  80 லட்சம் நிதி எங்கே? போனது.  கவர்னர் அலுவலகத்துக்கு வசூல் செய்யும் அதிகாரத்தை  யார் கொடுத்தது. பொதுப்பணித்துறைக்கு தெரியாமல் வாய்க்காலை  தூர்வாரியுள்ளனர். இது அமைச்சருக்கு தெரியுமா? செயலர் ஒப்புதல்  ெகாடுத்துள்ளாரா? என்பதை பார்க்கவில்லை.

டெண்டர் விட்டு தான் பணிகளை செய்ய  வேண்டும் என லஞ்ச ஒழிப்பு ஆணையம் வரைமுறை வகுத்துள்ளது. இதை மீறி கவர்னர்  செயல்பட்டிருக்கிறார். இது அரசாங்கம். இது ஒன்றும் தனியார் கம்பெனி அல்ல.  நாளைக்கே இந்த நிதி குறித்து தணிக்கை கேட்டால் யார்? பதில் சொல்வது.  சிஎஸ் ஆர் நிதியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

 நான்  எனது கடமையை சரியாக செய்து வருகிறேன். எந்த கோப்பும் என்னிடம்  தேங்கவில்லை. கவர்னர் தான் 15 நாள் 20 நாள் என கோப்புகளை தேக்கி  வைக்கிறார்.

 நிதி விஷயங்களில் கவர்னர் தலையிட அதிகாரம் இல்லை. அமைச்சரின்  உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக வாய்க்காலை தூர்வார உதவி செய்த அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கவர்னர் மாளிகை சிஎஸ் ஆர் நிதி முறைகேடு குறித்து நீதி விசாரணை  வேண்டும். கவர்னர் மாளிகை அதிகாரிகள் என்பதால் உள்அமைச்சகத்தின் அனுமதி பெற்று  விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

இவை அனைத்திற்கும் கவர்னர் கிரண்பேடி  தான் பொறுப்பேற்க வேண்டும். கவர்னர் செயலர் தேவநீதிதாசை மத்திய உள்துறை  அமைச்சகத்தின் உத்தரவுக்கு மாறாக சிறப்பு அதிகாரியாக கவர்னர்  நியமித்திருக்கிறார்.

இதுகுறித்து மத்திய உள்துறையில் புகார் அளிப்போம்.  சிஎஸ்ஆர் நிதி என்ற பெயரில் தொழில் நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களிடம்  பேரம் பேசப்படுகிறது. கவர்னருக்கு உண்டான விதிகளை பின்பற்றாமல் அவருக்குள்ள  தகுதிகளை படிப்படியாக இழந்து வருகிறார். முதலில் அவர் விதிகளுக்கு  உட்பட்டு செயல்படட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: