கீழச்சிவல்பட்டி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல வழக்கு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை, அக். 16:  தினகரன் செய்தி எதிெராலியால், கீழச்சிவல்பட்டி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்லக் கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த வக்கீல் முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு போக்குவரத்து கழகத்தின் காரைக்குடி மண்டலத்தில் இருந்து மதுரை-தஞ்சை தடத்தில் சுமார் 23 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல தனியார் பஸ்களும் இந்த தடத்தில் இயங்குகிறது. இந்த தடத்தில் கீழச்சிவல்பட்டி ஒரு நிறுத்தம் என தகவல் அறியும் சட்டத்தில் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். ஆனால், கீழச்சிவல்பட்டி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்வதில்லை. இதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அவசர காலத்தில் கூட நகரத்திற்கு ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊருக்குள் வந்து சென்ற பஸ்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்கின்றன. தொடர்ந்து மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த அக்.6ல் விரிவான செய்தி வெளியானது. இதையறிந்தும் இதுவரை பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மதுரை-தஞ்சை தடத்தில் இயக்கப்படும் பஸ்களை கீழச்சிவல்பட்டி ஊருக்குள் வந்து செல்ல உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் போக்குவரத்து கழக அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: