பண்ருட்டி அருகே மழைநீரால் சேதமடையும் அரசு பள்ளி கட்டிடம்

பண்ருட்டி, அக். 16:  பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசினர் மேனிலைப்பள்ளியில் கடந்த 15 வருடத்துக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களில் 9, 10, 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகே நடப்பட்ட மரங்களின் தழைகள் அனைத்தும் கட்டிடத்தின் மேல் விழுந்து கிடப்பதால் அதிகளவில் குப்பைகளாக சேர்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் கடந்த சில வாரத்துக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கி வெளியே செல்லமுடியாமல் நின்றது.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரியவில்லை. இதனால் கட்டிடத்தின் மேல்பகுதியில் தண்ணீர் தேங்கி தளம் முழுவதும் ஓதம் ஏற்பட்டு வகுப்பறையில் ஆங்காங்கே மழைநீர் கசிந்து வருகிறது.

இதனால் மாணவ-மாணவிகள் பாடம் பயில முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட கட்டிட பிரிவு பொதுப்பணித்துறையினர் பள்ளி கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்து சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

கடலூர், அக். 16:  மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது ஊனத்தின் தன்மையை தாமாக முன் வந்து தெரிவிக்கும் பட்சத்தில் அதனை படிவம் 6ல் குறிப்பிட்டு பெற்று அதன் அடிப்படையில்  வாக்கு பதிவு நாளன்று அவர்கள் எளிதில் வாக்குச்சாவடிக்கு சென்று எவ்வித இடையூறுமின்றி வாக்களிக்க போதிய வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம்

தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தற்போது நடைபெற்று வரும் சிறப்பு சுருக்க திருத்த பணி 2019 காலகட்டத்தில்(1-9-2018 முதல் 31-10-2018 வரை) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 20ம் தேதி அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமின் போது வாக்காளராக பதிவு செய்திடாத மாற்றுத் திறனாளிகள் பெயர் சேர்ப்பதற்குரிய போதிய ஆதாரங்களுடன் படிவம் 6யை பூர்த்தி செய்து அளிக்கலாம். மேலும் ஏற்கனவே வாக்காளராக பதிவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் விவரத்தை வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளித்து தங்கள் ஊனத்தின் அளவினை பதிவு செய்து கொள்ளலாம். இதனடிப்படையில் வாக்களிக்க போதிய வசதி செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories: