மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் அடைப்பு

கடலூர், அக். 16: 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுவிநியோக திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டது.   

ரேஷன் கடை ஊழியர்களுக்கான படியை உயர்த்தி வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் 1200 ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தது.

பொது விநியோக திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டது. ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் முன் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டனர். நியாய விலை கடை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் விளக்கவுரையாற்றினார். சங்க நிர்வாகிகள் தேவராஜ், முத்துபாபு, சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சினுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். பேச்சுவார்த்தை குறித்து கோரிக்கை வைத்தும் அழைக்காமல்

போனதால் தான் போராட்டம் நடத்துகிறோம்.

ஆகையால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால்

அதை சந்திக்க தயாராக உள்ளோம். தமிழகம் முழவதும் 30 ஆயிரம் கடைகள் மூடப்படும். 25 ஆயிரம் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றார்.

சிதம்பரம்: ரேஷன்கடை ஊழியர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிதம்பரத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால்  பெரும்பாலான ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள்

அவதியுற்றனர்.

Related Stories: