எரிவாயு பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு கிராமமக்கள் திடீர் கோஷம் அமைதி கூட்டத்தில் பரபரப்பு

ராமநாதபுரம், அக்.16:  வாலாந்தரவையில் எரிவாயு பம்பிங் ஸ்டேசன் அமைப்பது தொடர்பாக நடந்த அமைதி கூட்டத்தில் கிராமமக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐஓசி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தில் இருந்து தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திற்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.  இதற்கான   பம்பிங் ஸ்டேசன் அமைக்க கடந்த மாதம் பூமிபூஜை போட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது வாலாந்தரவை மற்றும் சுற்றுவட்டார  கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் நேற்று மாலை அமைதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  தெற்குகாட்டூர் கிராமத்தலைவர் சவுந்தர்ராஜன், முன்னாள் மண்டபம் ஒன்றிய தலைவர் முனியசாமி,  வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, வழுதூர் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மூர்த்தி, ராஜா, வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வம்,

மேகநாதன் மற்றும் கிராம பொதுமக்கள், ஐஓசி சார்பில் டிஜிஎம் கௌதமன், மிதுன்குமார், முருகேசன் மற்றும் தாசில்தார் சாந்தி(பொ), மண்டல துணை தாசில்தார் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமமக்கள் பேசுகையில், ‘‘கூட்டத்திற்கு கலெக்டர், எஸ்பி மற்றும் ஓஎன்ஜிசி, ஐஓசி, கெய்ல், ஆர்கே பவர்பிளாண்ட் மற்றும் எங்கள் பகுதியில் உள்ள தனியார் நிறுவன பொறுப்பாளர்கள் அனைவரும் வர வேண்டும். கலெக்டர், எஸ்பி  தலைமையில்தான் கூட்டம் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். அப்போது   எங்கள் கிராமத்தில் பம்பிங் ஸ்டேசன் அமைக்கக் கூடாது என பெண்கள்  கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் ‘உங்கள் கருத்துக்களை கலெக்டரிடம் தெரிவிக்கிறோம்’ என அறிவித்துவிட்டு கூட்டத்தை முடித்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories: