சாலை விரிவாக்க அளவீடு பணி தீவிரம்

பண்ருட்டி, அக். 16: பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தி வருகின்றனர். அதிக விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்து வருகின்றனர். இதில் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசூர் மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஒருசிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.

தற்போது இதுபோன்ற இடங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணி துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில் நேற்று புதுப்பேட்டையில் தர்கா பகுதியிலிருந்து காவல்நிலையம் வரை நேற்று பணியை துவங்கினர். சாலை பணி ஆய்வாளர் ஜானகிராமன், நிலஅளவையர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சாலை பகுதியிலிருந்து அளவீடு செய்தனர். இப்பணிகள் முடிந்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அகலப்படுத்தப்படும் என தெரிகிறது.

மணல் திருடிய இருவர் கைது

புவனகிரி, அக். 16: பரங்கிப்பேட்டை போலீசார் கலிமாநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினி டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், சம்மந்தம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(20), தனசிங்கு(35) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: