வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ரேஷன் கார்டு நகல் எரிப்பு

விருத்தாசலம், அக். 16: எடச்சித்தூர் ஊராட்சியில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் நேற்று காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், ரேஷன் கார்டு நகலை எரித்து பிடிஓ ெசயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சுத்தமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீருக்காக அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் விருத்தாசலம் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே காலி குடங்களுடன் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த கிராமத்தில் வாழ்வதற்கு எங்களுக்கு எந்தவித அரசு சலுகைகளும் தேவையில்லை. அதனால் எங்களுடைய ரேஷன் கார்டுகளை விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம்.

 தற்போது அந்த ரேஷன் கார்டுகளின் நகல்களை எரிப்பதற்கு முடிவு எடுத்துள்ளோம் என கூறி ரேஷன் கார்டுகளின் நகல்களை தீயிட்டுக் கொளுத்தி எரித்தனர். அப்போது விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் எடச்சித்தூர் ஊராட்சி செயலர் ஆகியோரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் மேலும் கூறுகையில், அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து பலமுறை எடுத்துக் கூறியும், போராட்டம் நடத்தியும், தீர்வு காண எவ்வித முயற்சியும் எடுக்காத விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எங்கள் ரேஷன் கார்டுகள் அனைத்தையும் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.

Related Stories: