பொதுமக்கள் கடும் அதிருப்தி கீழக்கரை அருகே பொதுப்பாதையை மீட்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

கீழக்கரை, அக்.16:  பொதுப்பாதையை மீட்டுத்தரக்கோரி, தாசில்தார் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழக்கரை அருகே பழஞ்சிரை கிராமத்தில் ஊரணி உள்ளது. கிராமத்துக்கு சொந்தமான இந்த ஊரணிக்கு செல்லும் பாதையை தனியார் சிலர், முள்வேலி போட்டு அடைத்துள்ளனர். இப்பகுதி கிராமமக்கள் ஊரணியில் குளிக்க முடியாமலும், துணி துவைக்க முடியாமலும் அவதியடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராமமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று முன்தினம் இரவு, பொதுப்பாதையை அதிகாரிகள் மீட்டு தர கோரி கீழக்கரை-ராமநாதபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கீழக்கரை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் யமுனா மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பழஞ்சிரை கிராமமக்கள், நேற்று திடீரென தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள், ஊரணிக்கு செல்லும் வழியில் அடைத்து வைத்திருந்த முள்வேலி அடைப்பை திறந்துவிட்டனர். மீண்டும் அடைத்தால் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கிராமமக்கள்

எச்சரித்துள்ளனர்.

Related Stories: