விளையாட்டு உபகரணங்கள் சேதம் புதர் மண்டி கிடக்கும் பாரதியார் பூங்கா

பரமக்குடி, அக்.16: பரமக்குடியில் உள்ள பாரதியார் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் உடைந்து புதர்மண்டி கிடக்கிறது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பரமக்குடி- ஐந்து முனை பகுதி அருகே முதுகுளத்தூர் சாலையில் பாரதியார் பூங்கா உள்ளது.  நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளதால் ஏற்கனவே சிறுவர், சிறுமிகள் உட்பட பொதுமக்கள் அதிகம் பேர் பயன்படுத்தி வந்தனர்.  நாளடைவில் பூங்காவில் இருந்த விளையாட்டு கருவிகள் சேதமடைந்ததால் சிறுவர், சிறுமிகள் கூட்டம் குறைய தொடங்கியது.  பூங்காவில் இருந்த பெரும்பாலான விளையாட்டு கருவிகள் உடைந்த நிலையில் உள்ளதால் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். பரமக்குடி நகரில் பொழுதுபோக்கு அம்சத்திற்கு வசதிகள் இல்லாததால் பள்ளி விடுமுறை காலங்களில் சிறுவர், சிறுமிகள் வைகை ஆற்று பகுதியில் கைப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பூங்காவை சரிசெய்தால் விடுமுறை காலத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். இதுதவிர பொதுமக்களும் பயன்படுத்தலாம்.  தற்போது பூங்கா முழுவதும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் சிறுவர் சிறுமிகள் உள்ளே செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர்.  இதுதவிர இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்த பலர் மதுபானங்களை வாங்கிக் கொண்டு பூங்காவின் உள்ளே சென்று விடுகின்றனர். பராமரிப்பு இல்லாமல் வீணாகும் பூங்காவை நகராட்சி அதிகாரிகள் நல்ல முறையில் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தாமரைகண்ணன் கூறுகையில், ‘‘முறையான பராமரிப்பு இல்லாததால் சிறுவர் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால் ஒருமுறை குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் மறுமுறை வர தயக்கம் காட்டுகின்றனர்.  பூங்காவின் வருமானமும் குறைகிறது. தூய்மையாக இல்லாததால் பகல் நேரங்களில் பலர் சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர். இனிவரும் காலங்களில் பூங்காவில் உள்ள  செடிகொடிகளை அகற்றி தேவையான வசதிகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: