கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் புகார் தடை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்

மண்டபம், அக்.16: தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கரைவலை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தூண்டில், வீச்சுவலை, கரைவலை, நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாட்டுப்படகு மீனவர்கள் மூன்று நாட்டிக்கல் கடல் மைல் தொலைவிலும் விசைப்படகு மீனவர்கள் மூன்று  நாட்டிக்கல் கடல் மைல் தொலைவிற்கு மேல் சென்றும் மீன்பிடித்து வருகின்றனர். தற்போது ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி, கொள்ளிமடி, சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மீன்வளம் அழிந்து வருகிறது. இதை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து கரைவலை மீன்பிடி மீனவர்கள் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் கடலோர பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் கடல் வளம் மற்றும் மீன்வளம் அழிந்து வருகிறது. மேலும் கரைவலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு போதிய மீன்வரத்து கிடைப்பதில்லை. இதனால் கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையில், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது அதிகரித்துள்ளது. இதனால் இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: