தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் சிறப்பு ஆரத்தி வழிபாடு

செய்துங்கநல்லூர், அக்.16: தாமிரபரணி மகா புஷ்கர திருவிழாவின் 5ம் நாளான நேற்று முறப்பநாடு தீர்த்தக்கட்டத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

 தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நடந்து வருகிறது. விழாவின் 5ம் நாளான நேற்று முறப்பநாடு குரு தீர்த்த கட்டத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு வழிச்சாலையில் முறப்பநாட்டில் இருந்து வல்லநாடு வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர். மெயின்ரோட்டில் இருந்து ஆட்டோவில் பகதர்கள் வரிசையாக ஏற்றப்பட்டு தீர்த்தகட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். தீர்த்தக்கட்டத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

  இதேபோல் இங்கு வந்த பக்தர்கள் ஆழிகுடி தீர்த்த கட்டத்துக்கும் சென்று புனித நீராடினர். அகரம் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள தசவதார தீர்த்த கட்டத்திலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் தொண்டர் குலத்தின் சார்பாக நேற்று மாலை 3 மணியளவில் பாறைக்காடு அருள் ஆனந்த செந்தில் விநாயகர், பெருமாள் கோயிலிலிருந்து திருமஞ்சன அபிஷேக பொருட்கள், மலர்களோடு சன்மார்க்க தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தாமிரபரணி நதிக்கரையோரம் வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு அகவல் பாராயணம், சிவபுராணம், விநாயகர் அகவல் பாடல்கள் பாடினர். மாலை 6 மணியளவில் அன்னை தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிஷேகமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6.45 மணியளவில் மங்கள ஆரத்தி தீபாராதனை  இடம் பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் பீடத்தில் இருந்து அகரம் தசாவதார தீர்த்த கட்டத்தில்  எழுந்தளி மகா புஷ்கர விழா நடந்தது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்.   

   வைகுண்டம்:  வைகுண்டம் பிரம்ம தீர்த்த கட்டத்தில் புஷ்கர திருவிழா தினமும் சிறப்பு வழிபாடுகள், யாகங்களுடன் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடு நடந்தது.

தொடர்ந்து மாலையில், தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டு, தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டினை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் அனைவருக்கும் தாமிரபரணி தீர்த்தம் தெளிக்கப்பட்டு ஆசீர்வாதம் செய்யப்பட்டது. பின்னர் வாணவேடிக்கையுடன் பக்தர்கள் தாமிரபரணியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை புஷ்கர கமிட்டியினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் மக்கள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.

  ஏரல்:  ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் படித்துறை அருகிலுள்ள ஞானதீர்த்த கட்டத்தில் நேற்று 4வது நாளாக தாமிரபரணி மகா புஷ்பக விழா கமிட்டி சார்பில் கோ பூஜை நடத்தப்பட்டு தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் மலர் தூவி சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தாரும், தாமிரபரணி புஷ்கர விழா கமிட்டி தலைவருமான கருத்தப்பாண்டிய நாடார் தலைமையில் திரளான மக்கள் கலந்து கொண்டு ஞான தீர்த்ததில் புனித நீராடினர். மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நேற்று மாலை சமயபுர மாரியம்மன் தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து மாரியம்மன் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் நாராயணன் தலைமை வகித்தார்.  நகர தலைவர் சிவராமன் மற்றும் ராமராஜன், கதிரவன், மந்திரகுமார், லெட்சுமணன், அன்பு உட்பட பலர் தீர்தக்கரையில் பேசினர். இந்நிகழ்ச்சியில் ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான தசரா பக்தர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

   இதேபோல் சிறுத்தொண்டநல்லூர் ஊர்மக்கள் சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்று தீர்த்தக்கரை சுந்தரவிநாயகர் கோயில் அருகில் ஏற்பாடு செய்திருந்த ஞானதீர்த்த கட்டத்தில் நேற்று 4வது நாளாக கோ பூஜை நடத்தப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி, அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞான தீர்த்தத்தில் புனித நீராடினர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் ரவிசங்கர், தொழிலதிபர்கள் ஜெயசங்கர்ராஜ், ராமகிருஷ்ணன், கொற்கைமாறன், ஆறுமுகப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வாழவல்லான் கங்கா தீர்த்தம், உமரிக்காடு மற்றும் மங்கலகுறிச்சி பகுதிகளிலும் நேற்று 4வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர்.

Related Stories: