மல்லிகை செடியில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் கவலை

திருவள்ளூர், அக். 16:திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், பூச்சி நோய் தாக்குதலால் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த மோவூர், புல்லரம்பாக்கம், புதுமாவிலங்கை, எம்ஜிஆர் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆழ்குழாய் போர்வெல் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து தற்போது, போர்வெல்லில் கூட தண்ணீர் கிடைப்பதில்லை.

மேலும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் அதிகம் தேவைப்படாத மல்லி, சாமந்தி, ரோஜா, முல்லை, கனகாம்பரம், செவ்வந்தி, சம்பங்கி, மரிக்கொழுந்து, கோழிகொண்டை போன்ற மலர்வகை தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.

தோட்டக்கலை மலர் வகை பயிர்களுக்கு குறைவான தண்ணீர் போதும். அதிக வேலை ஆட்கள் தேவையில்லை. விவசாய செலவும் குறைந்து அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் இவற்றை பயிர் செய்து வருகின்றனர். தற்பொழுது மோவூர், புதுமாவிலங்கை, புல்லரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், விவசாயிகள், தங்களது நிலத்தில் விளையும் மல்லிகை பூக்களை திருவள்ளூரில் விற்பனைக்கு எடுத்துக்கொள்வதால் அதிக லாபகரமாகவும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை பூச்செடிகளில் சமீப காலமாக மஞ்சள் நோய் மற்றும் பேன் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் பூ செடிகள் நோய் தாக்குதல் ஏற்பட்டு பூக்கள் நிறம் மாறி மஞ்சளாக காணப்படுகிறது.

 விவசாயிகள் அதிக அளவிற்கு பூச்சி மருந்துகள் செடிகளுக்கு தெளித்தும் நோயின் தாக்கம் குறையவில்லை.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் அவர்கள் வந்து பார்த்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.எனவே தோட்டக்கலை துறை அதிகாரிகள் மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, மல்லிகை பூ பயிரை நோய் தாக்குதலில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: