ஹான்ஸ் கொடுக்காததால் அடித்து விரட்டினர் உயிருக்கு பயந்து ஓடிய வாலிபர் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

சென்னை, அக்.16: ஹான்ஸ் கேட்டு கொடுக்காததால் 2 பேர் வழிமறித்து சரமாரியாக அடித்து உதைத்ததில், வாலிபர் ஒருவர் உயிருக்கு பயந்து ஓடிய போது எதிரே வந்த மாநகர பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தாச பிரகாஷ் ஓட்டல் அருகே நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் சென்ட்ரல் நோக்கி நடந்து சென்று ெகாண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் பைக்கில் வந்த 2 பேர், வாலிபரை வழிமறித்து ஹான்ஸ் கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் ஹான்ஸ் இல்லை என்று கூறி அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் ஹான்ஸ் வைத்துக்கொண்டு கொடுக்க மாட்டியா எனக்கேட்டு சரமாரியாக அடித்து உதைத்து ஹான்சை பிடுங்கிக்கொண்டனர்.

பிறகு அந்த வாலிபர், இருவரிடமும் ஹான்ஸ் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார். உடனே அவர்கள் வாலிபரை சாலையோரம் உள்ள சுற்றுச்சுவரில் மோதி கடுமையாக தாக்கினர். இதில் வலிதாங்க முடியாமல் அந்த வாலிபர் துடித்தார். அப்போதும் அவர்கள் விடாமல் வாலிபரை ஓட ஓட அடித்து விரட்டினர். ஒரு கட்டத்தில், அந்த வாலிபர் உயிருக்கு பயந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து எதிர் திசைக்கு ஓடினார். அப்போ,து பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த மாநகர பேருந்தின் இடதுபக்க முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஓட்டுனர் ஈஸ்வரன் (38), பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தினார். அப்போது 10 மீட்டர் தொலைவுக்கு வாலிபர் பேருந்து சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு தலை மற்றும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் விபத்துக்கு காரணம் வாலிபரை இரண்டு பேர் அடித்ததுதான் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது, விபத்தில் இறந்த வாலிபரை, எழும்பூர் டாக்டர் சந்தோஷ் நகர் பொன்னியம்மன் தெருவை சேர்ந்த கமல் (எ) மதுரை முத்து (28), அதே பகுதியை சேர்ந்த தேவன் (30) ஆகியோர் வழிமறித்து ஹான்ஸ் கேட்டு அடித்து உதைத்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.

இதற்கிடையே உயிரிழந்த வாலிபர் விபத்தால் இறக்கவில்லை. அவரை கொலை செய்யும் நோக்கில் துரத்தியதால்தான் பேருந்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. எனவே, வழக்கை அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

 அதைதொடர்ந்து வாலிபர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த கமல் (எ) மதுரை முத்து, தேவன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மதுரை முத்து மீது ஜல்லிக்கட்டு கலவரத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: