திருட்டு சிடி தயாரிக்க உதவிய 9 தியேட்டர்களுக்கு தடை

சென்னை, அக். 16: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒரு திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில், தயாரிப்பாளர் பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். பிறகு கடும் சிரமங்களுக்கு இடையேதான் அதை வெளியிடுகிறார். ஆனால் அந்த படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது என்று ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 9  திரையரங்குகள் மூலம் புதிய படங்களை திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த திரையரங்குகளின் மீது சட்ட ரீதியாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தியேட்டர்கள் விவரம்: கிருஷ்ணகிரி முருகன், கிருஷ்ணகிரி நயன்தாரா, மயிலாடுதுறை கோமதி, கரூர் எல்லோரா, ஆரணி சேத்பட் பத்மாவதி, கரூர் கவிதாலயா, பெங்களூரு சத்யம், விருத்தாசலம்  ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர், மங்களூர் சினிபொலிஸ். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: