அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தொல்லெழுத்து பயிலரங்கம்

கிருஷ்ணகிரி, அக்.12: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தொல்லெழுத்து பயிலரங்கம் நடந்தது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பயிலும் 50 மாணவர்களுக்கு தொல்லெழுத்து பயிலரங்கம் நடந்தப்பட்டது. முதல் நாள், அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் கோவிந்தராஜ், இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், தமிழ் எழுத்துக்கள் தோன்றிய காலம், அதன் வடிவம் குறித்து விளக்கினார். அத்துடன் பிராமி என்னும் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்களை தாமே எழுத பயிற்சி அளித்தார். கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு மாற்றமடைந்து, தற்போதைய நிலையை அடைந்துள்ளது என்பது குறித்து விளக்கினார்.

2ம் நாள், தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்த வட்டெழுத்து குறித்தும், பிற்கால கல்வெட்டுக்களில் காணப்படும் கிரந்த எழுத்துக்களை எவ்வாறு படிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்தார். பழங்கால தமிழ் எண்கள் கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. 3ம் நாள் கல்வெட்டுக்களை படியெடுப்பது குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் போச்சம்பள்ளியில் இருந்து கொண்டுவரப்பட்ட கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒய்சாள மன்னர் சோமேஸ்வரன் காலத்தில் திருவனந்தீஸ்வரமுடைய நாயனார் கோயிலத்தில் தானம் வழங்கப்பட்ட செய்தியைக் குறிக்கும் கல்வெட்டை தாமே படியெடுத்து, அதில் உள்ள எழுத்துக்களை படிக்க கற்றுக்கொண்டனர். இப்பயிற்சியை அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். 

Related Stories: