உலக கண்பார்வை தின விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி, அக்.12: உலக கண்பார்வை தினத்தையொட்டி திருச்சியில் நேற்று நடந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உலக கண்பார்வை தினம் நேற்று (அக்டோபர் 11ம்தேதி) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளை ஆகியன இணைந்து விழிப்புணர்வு மனிதசங்கிலி நடத்தியது.திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண் பார்வை தினத்தன்று மக்களுக்கு கண் நலம் பற்றிய விழிப்புணர்வை வழங்கி வருகிறது. 126 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 2.7 கோடி பேர் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒரு நோயை குணப்படுத்துவதை காட்டிலும் அதனை வராமல் தடுப்பது எளிது. நோயை கண்டுபிடித்துவிட்டால் நோய் முற்றாமல் அந்த நிலை யிலேயே பார்வையை காப்பாற்றி கொள்வது சிறந்தது’ என மருத்துவமனை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கார்னியல் பார்வை கோளாறினால் பார்வை இழந்தவர்கள் நாட்டில் 10 லட்சம் பேர் உள்ளனர். ஒருவர் இறந்த பிறகு 6 மணி நேரத்துக்குள் அவர்களது கண்களை தானமாக அளிக்கும் பட்சத்தில் அந்த கண்களால் இருவர் மீண்டும் பார்வை பெற வாய்ப்புள்ளது. இந்த விழிப் புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மனித சங்கிலி நேற்று நடந்தது.மனித சங்கிலியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா துவக்கி வைத்தார். இதில் ஜமால்முகமது கல்லூரி செயலாளர் காஜாநஜுமுதீன், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி பிரபா, ரோட்டரி கிளப்ஆப் பட்டர் பிளை தலைவர் ஜானகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஜோசப் கண் மருத்துவமனை துணை இயக்குனர டாக்டர் தனுஜா பிரிட்டோ வரவேற்றார். டாக்டர் ஆண்டனி நன்றி கூறினார்.

Related Stories: