மதுரை வைகை கரையோரத்தில் நேற்றும் மரங்கள் வெட்டிச் சாய்ப்பு ‘கலெக்டரே வெட்டச் சொல்லிட்டார்... ரத்தை வெட்டித் தள்ளு...’

மதுரை, அக்.12: மதுரை வைகை ஆற்றுக் கரை  ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மரங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி  அகற்றப்பட்டதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது. ‘‘கலெக்டரே வெட்டச் சொல்லிவிட்டார்... மரத்தை வெட்டித் தள்ளு..’’ என்ற அதிகாரியின் உத்தரவு ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளிவந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரை வைகையாற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதன்பேரில் நேற்று முன்தினம் துவங்கி, பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் வைகை ஆற்றின் தென்கரைப் பகுதிகளில் உள்ள மரங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகக் கூறி தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது.

இதற்கு இயற்கை ஆர்வலர்களுடன், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்த சொல்லி முறையிட்டனர். ஆனால், இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள், இது மேலதிகாரிகளின் உத்தரவு எனக்கூறி கரையோரங்களில் உள்ள சுமார் 500க்கும் அதிகமான மரங்களையும், மரக்கன்றுகளையும் அகற்றியுள்ளனர். வேம்பு, நாவல் உள்ளிட்ட நன்மை தரும் பல்வேறு மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்த மரங்கள் அனைத்துமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  பிறந்தநாளை முன்னிட்டும், தனியார் அமைப்புகள் சார்பிலும், பள்ளி கல்லூரி மாணவர்களால் நடப்பட்டது.  இப்பகுதி மாணவர்கள் நாள்தோறும் தண்ணீர் ஊற்றி, வேலி அமைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் திடீரென அதிகாரிகள் வந்து மரங்களைக் குறிவைத்து அகற்றியது அத்தனை தரப்பினரையும் மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

வைகையாற்றின் நடுவே நீர்வரும் பாலங்களில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. ஆனால், கரையோர மரங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வெட்டப்பட்டிருக்கிறது. இதனால், கரையோர சாலைகள் சரிந்து, பொதுமக்கள் அச்சத்துடன் கடந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புல்டோசர் மூலம் பிடுங்கப்பட்ட மரங்கள் அனைத்தையும் வெளியில் எடுத்துசெல்லாமல், ஆற்றின் வெள்ளத்திற்கு உள்ளயே போட்ட வேடிக்கையும் நடந்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், மரங்களை அகற்றுவதற்கு மட்டுமே மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஒரு அதிகாரி போனில் மரங்களை வெட்டித்தள்ளி வரும் ஒருவரிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில், ‘‘கலெக்டரே மரத்தை வெட்ட சொல்லிவிட்டார். மரத்தை வெட்டித் தள்ளு’’ என உத்தரவிடப்படுகிறது. ‘ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கூறினால், அதை விட்டு விட்டு மரக்கன்றுகளை நட வேண்டிய மாவட்ட, மாநகராட்சி, பொதுப்பணித்துறை நிர்வாகங்கள் மரக்கன்றுகளை அகற்றுவது எந்த வகையில் நியாயம்?’ என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

Related Stories: