தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் தொடுதிரை கணினி சேவை துவக்கம்

தூத்துக்குடி,அக்.11: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் வழக்குகள் குறித்த விபரங்களை தெளிவாகவும் உடனடியாகவும் தெரிந்து கொள்ளும் விதமாக தொடுதிரை கணினி சேவை அமைக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் புதிய தொடுதிரை கணினி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 2வது கூடுதல் அமர்வு நீதிபதி கவுதமன், தலைமை குற்றவியல் நீதிபதி பகவதியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில்  மாவட்ட சட்டபணி ஆணை குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின் மற்றும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வியாபாரி வீட்டில் திருட்டு

குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியைச்சேர்ந்தவர் ஜெய்கர். இவர் சென்னையில் வியாபாரம் செய்து வருகிறார். குடும்பம் சென்னையில் உள்ளது.  வீட்டை அங்கமங்கலம் கோட்டார்விளையைச்சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகவேல்(31) என்பவர் பராமரித்து வந்தார். அமைச்சர் என்ற பெண் அவ்வப்போது வீட்டை கழுவி சுத்தம் செய்வது வழக்கம். இதுபோல் 9ம் தேதி வீட்டை கழுவ சென்ற அமைச்சர் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து நாகவேலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் குரும்பூர் போலீசிற்கு தெரிவிக்கவே, எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தனர். அப்போது சுவாமி படத்தின் பின்பக்கம் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவில் இருந்த 2 வெள்ளி குத்துவிளக்கு, திருநீர் கிண்ணம், வெள்ளி தாம்பூலம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரமாகும். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளியை தாக்கிய 4பேர் கைது

தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் மந்திரகுமார்(52). கூலித்தொழிலாளி. இவருக்கும், உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து, கனகசேகரன், ஜெயலெட்சுமி மற்றும் பூவையா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து மந்திரகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த மந்திரகுமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் எஸ்ஐ முத்துமாலை வழக்குபதிவு செய்து 4 பேரையும் தேடி வருகிறார்.

Related Stories: