போலீஸ்காரருக்கு டெங்கு காய்ச்சல்

திருவள்ளூர், அக். 12: திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு சென்னை அரசு  மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம புறங்களில், கழிவுநீர் வெளியேற முறையான வடிகால்வாய் இன்றி பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இது கொசு உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கி உள்ளது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் நாள்தோறும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஜஸ்டின் (26) என்பவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜஸ்டின் சென்னையில் இருக்கும் போலீஸ் விளையாட்டு பயிற்சி பள்ளியில் ஜிம் மாஸ்டராக உள்ளார்.எனவே அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: இன்று முடிவு அறிவிப்பு

திருத்தணி, அக். 12: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குனர்கள் தேர்வுக்கு மொத்தம் 86 பேர் போட்டியிடுகின்றனர். இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 7 உட்கோட்ட கரும்பு அலுவலங்கள் உள்ளன. இந்த ஆலையின் நிர்வாக இயக்குனர்கள் 5 பெண்கள் உள்பட மொத்தம், 17 பேர் நியமிக்கப்படுவர். இந்த இயக்குனர்கள் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6ம் தேதி நடந்தது.

இதில் 6 பெண்கள் உள்பட மொத்தம் 93 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த, 8ம் தேதி வேட்பு மனு பரிசீலனையின் போது 6 மனுக்கள் தகுதியில்லாதவை என தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒருவர் மட்டுமே வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். தற்போது, 6 பெண்கள் உள்பட மொத்தம், 86 பேர் களத்தில் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் நேற்று (11ம் தேதி) காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற்றது. இன்று (12ம் தேதி) காலை ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற இயக்குனர் பெயர்கள் அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட, 17 இயக்குனர்களில் ஒருவரை நிர்வாகக் குழுத் தலைவராகவும், மற்றொருவர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 32,289 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பல விவசாயிகள் வாக்களிக்க முன்வரவில்லை. 4,752 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்ததாகவும், வெறும் 8 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார். திருவாலாங்காடு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், கூளுர் ராஜேந்திரன், கஸ்தூரி உள்பட பலரும் வாக்களித்தனர்.

Related Stories: