கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும்: கலெக்டர் தகவல்

அம்பத்தூர், அக். 12: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பராபட்சம் இல்லாமல் அகற்றப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியை சுற்றி உள்ள கருக்கு, மேனாம்பேடு, கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் கொரட்டூர் ஏரியின் உட்பகுதியான முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், எஸ்.எஸ் நகர் ஆகிய இடங்களில் 598 ஆக்கிரமிப்பு வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் 1000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் குடும்பத்தினருடன் அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து தாசில்தார் சிராஜ்பாபு தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படாததால் சென்னை மாவட்ட கலெக்டரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், அம்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஏற்க மறுத்தார்.

மேலும், பேச்சுவார்த்தையில் இன்று (12ம் தேதி) கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற ஒத்துழைத்த 17 வீடுகள் முதற்கட்டமாக அகற்றப்படுகிறது. மேலும், வரும் 15ம் தேதி மீதியுள்ள 581 ஆக்கிரமிப்பு குடியிருப்பாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதில், கலந்து கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், கலெக்டர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின் பெயரில் 8 வாரங்களுக்குள் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 2 வாரங்களுக்குள் அதனுடைய தகவல்களை கொடுக்கவேண்டும். மீறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதன்படி கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் (12ம் தேதி) ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும். அவர்களுக்கு மாற்று இடம் குறித்த விபரங்களை குடிசைமாற்று வாரியத்துடன் ஆலோசித்து வருகிறோம். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கல்லூரி, வணிக வளாகம், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அகற்றப்படும். இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏரி நிலங்களை விற்ற மாபியா கும்பல் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில் குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ளத்தின் பொழுது பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்என்று தெரிவித்தார். அப்போது, அம்பத்தூர் தாசில்தார் சிராஜ்பாபு உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: