மேலேரி கிராமத்தில் அவலம் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி: புகார் கொடுத்தும் எட்டி பார்க்காத ஊராட்சி செயலர்

பெரும்புதூர், அக்.12: பெரும்புதூர் ஒன்றியம் குணகரம்பாக்கம்  ஊராட்சி மேலேரி கிராமத்தில் 400க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு அதே பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யபடுகிறது.கடந்த ஒரு வாரமாக மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர வழங்கவில்லை. மேலும் அதே பகுதியில் 4 குடிநீர் தொட்டிகள் உள்ளன. இதில் கடந்த 3 ஆண்டுகளாக 3 தொட்டிகள் பழுதாகி சீரமைக்கப்படாமல் உள்ளது.ஒரு தொட்டியில் மட்டும் குடிநீரை தேக்கி வைத்தாலும், குழாய்கள் பழுதாகி கிடப்பதால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்துள்ளனர்.இதுபற்றி ஊராட்சி செயலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட அனைத்து அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சி செயலர் கிராமத்திற்கு வருவதே இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, மேலேரி கிராம மக்கள் கூறியதாவது, மேலேரி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாய கூலி வேலை செய்பவர்கள். எங்கள் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 4 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பகுதியில் குடிநீர் தட்டுபாடு இல்லை. தற்போது ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் 3 குடிநீர் தொட்டிகள் பழுதாகி கிடக்கிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.

இதில், கடந்த ஒரு வாரமாக தெருக் குழாயில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி ஊராட்சி செயலரிடம் பலமுறை செல்போனில் தகவல் தெரிவித்தும், இதுவரை கிராமத்துக்கு வந்து எட்டி பார்க்கவில்லை. என்ன பிரச்னை என விசாரிக்கவும் இல்லை. இதனால் எங்கள் கிராம மக்கள் குளத்தில் பாசி படிந்த தண்ணீரை குடித்து வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: