விபத்து வழக்கில் தொலைந்த ஆவணங்களை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்: சிபிசிஐடி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 12: விபத்து வழக்குகளில் தொலைந்துபோன ஆவணங்களை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டலூர்-பூந்தமல்லி புறவழிச்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம்தேதி நடந்த சாலை விபத்தில், மோகன்(54) என்பவர்  பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோமங்கலம் போலீசார்   அடையாளம் தெரியாத வாகனம் மோதி  மோகன் இறந்து விட்டதாக, பெரும்புதூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.    ஆனால், எங்களது காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்ட ஒரு லாரி மோதியதால் தான் மோகன் பலியானதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு,  ஒரே நபருக்கு இழப்பீடு கோரி 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று இழப்பீடு தரும் இன்சூரன்ஸ் நிறுவனமான சோழமண்டலம் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  அந்த மனுவில், “ சென்னையில் உள்ள 2  நீதிமன்றங்களில் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஒரு வழக்கில்  ₹42.35 லட்சமும், மற்றொரு வழக்கில் ₹50 லட்சமும் இழப்பீடு கோரப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர் நீதிமன்றத்தில்  ₹35 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த 3 வழக்குகளுக்கும் பதிலளிக்க எங்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள லாரி விபத்து நடந்த நாளன்று பழுதாகி மெக்கானிக் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 எங்களை மோசடி செய்யும் நோக்கத்துடன் இந்த 3 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்த மோசடியில் போலீஸ் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. எனவே காஞ்சிபுரம் எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தது.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், காஞ்சிபுரம் எஸ்பி மற்றும் சோமங்கலம் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  வழக்கு மீண்டும் கடந்த ஜூலை 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றங்களுக்கான பதிவாளரிடம் தம்பி என்ற வக்கீல் கடந்த 2017 ஜூன் 7ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், வாகன விபத்து வழக்குகள் தொடர்பான 55 வழக்கு கட்டுகள் மாயமாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தீர்ப்பாய பதிவாளரும், உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எனவே, இந்த வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.  போலி எப்ஐஆர், போலி இழப்பீடு கோரப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.

 இந்த குழு எப்ஐஆர்கள், போலி இழப்பீடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சந்துரு தலைமையிலான நிபுணர் குழு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், இன்னும் ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால் கால அவகாசம் வேண்டும் என்று அந்த குழு கோரியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த குழுவுக்கு ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கினார்.பின்னர் நீதிபதி அளித்த உத்தரவில், விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான தீர்ப்பாயங்களில் 353 வழக்குகள் இரட்டை இழப்பீடு கோரும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 111 வழக்குகளில் மனுதாரர்களுக்கும், அவர்களின் வக்கீல்களுக்கும் வழக்குகளை தள்ளுபடி செய்வது குறித்து நிபுணர் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: